" பறையனை ஓத்த தேவடியாளே எவ்வளவு தைரியமாக ஊர்த்தெருவுக்குள் வருகின்றாய் "
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், கலியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த தனது கணவருடன் வசித்து வருகிறார் வன்னிய சமூகத்து பெண்ணான சுதா.
கடந்த வருடம் கலியனூர் கிராமம் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த சத்தியகுமார் என்பவரை நீர்வல்லூர் கிராமம் வன்னிய சமூகத்தை சார்ந்த சுதா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நீண்ட நாட்களாக பெண்ணின் குடும்பத்தினர் இவர்கள் மீது எந்த தொடர்புமின்றி இருந்துள்ளனர்.
சில மாதங்கள் கழித்து பெண்ணின் மீதான பாசத்தால் சுதாவை அவர் தாயாரும் தந்தையும் வீட்டிற்கு அழைத்தனர். இதனால் தாய் வீட்டிற்கு சென்றார். சுதாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாராய வியாபாரி சேகர் சாதி ஆதிக்க வெறியுடன் சுதாவை பார்த்து " பறையனை ஓத்த தேவடியா எவ்வளவு தைரியமாக ஊர்த்தெருவுக்குள் வருகின்றாய் போகின்றாய் ", இன்னொரு முறை இங்கு வந்தால் உன்னையும் அந்த பறத் தேவடியா பையனையும் உயிரோடு எரித்து கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
அத்துடன் விடாமல் சுதாவின் தந்தைக்கு சொந்தமான நிலத்தை முள்வேலி அமைத்து ஆக்கிரமித்தும் உள்ளனர், சாராய வியாபாரி சேகரின் குடும்பத்தினர்.
இப்பிரச்சினையை ஊராட்சி தலைவரிடம் எடுத்து சென்றது, சுதா தரப்பு. ஆனால் சேகரின் அச்சுறுத்துலுக்கு பயந்து ஊராட்சி தலைவர் மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டார். இதன் பிறகு சுதா தரப்பு காவல் துறையை அணுகி புகார் அளித்திருந்தது.
01.04.2013 அன்று அளித்த புகாரின் பேரில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நூற்றுக்கணக்கான வழக்குகள் பதியப்பட்டு சாராய வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்த சேகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறையும் தயங்குகிறது.
ஒருபக்கம் சாதிவெறியர்களின் அபசொற்கள், மறுபக்கம் தன்னுடைய பிரசவ வலி அனைத்தையும் தாங்கிக்கொண்டு இருந்த சுதா இறுதியில் இப்பிரச்சினையை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரிடம் கூறியுள்ளார்.
உடனே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி ஒன்றிய, நகர மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராசு அவர்கள் தலைமையில் கட்சியினர் காவல் நிலையம் சென்று ஆய்வாளரை சந்தித்து சாதி ஆதிக்க உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாராய வியாபாரி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சுதா அவர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றனர். காவல்துறையும் கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் விடுதலைச்சிறுத்தைகள் இப்பிரச்சினையை போராட்ட வடிவமாக மாற்றி உரிமைக்காக போராடும் என்று காவல்துறை ஆய்வாளரிடம் கூறிவிட்டு வந்தனர்.
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

