Sporty Magazine official website | Members area : Register | Sign in

ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா சென்னையை அடுத்த மறைமலைநகரில் நேற்று நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். 





விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் விருதை திருமாவளவன் வழங்கினார். விருது பட்டயம், சான்றிதழ், பொற்கிழி, நினைவுப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது. இதேபோல், பெரியார் ஒளி விருது திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கும், காமராசர் கதிர் விருது கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது அப்துல் ரகுமானுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது ஞான.அலாய்சியசுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தேவநேயப்பாவாணருக்கும் வழங்கப்பட்டது. விருதுகளை முதல்வர் வழங்கினார். தேவநேயப்பாவாணருக்கான விருதை அவரது மகன் தேவமணி பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இங்கே திருமாவளவன் சில கோரிக்கைகளை வைத்தார். அவற்றை நான் தேர்தல் வாக்குறுதிகளாக மாற்ற விரும்புகிறேன். சட்டமன்றம் நடக்கும் போது கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றுவோம் என்று அறிவித்தால், ‘சட்டமன்றம் நடக்கும் போது எப்படி கோரிக்கைகளை நிறைவேற்றலாம்’ என்று அவையில் உள்ளவர்கள் கேட்பார்கள். எனவே, இங்கே திருமாவளவன் உறுதி அளித்தாரே அடுத்த முறையும் 6ம் முறையும் நீதான் வருவாய் என்று. அப்படி வரும் போது இந்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட தயாராக இருக்கிறேன். இங்கே அம்மையார் பேசுகையில், யாரோ ஒரு நீதிபதி ஏழை எளிய மக்களுக்கான நிலத்தை தனது பெயருக்கு மாற்றிவிட்டு அந்த மக்களை விரட்டி விட்டார் என்றார். அந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே முன்னாள் முதல்வராக இருந்த ஒருவர் சிறுதாவூர் அருகே பஞ்சமர்களுக்கு இருந்த நிலங்களை அபகரித்து வீடு கட்டிக் கொண்டு அந்த ஆதிதிராவிட மகட்களை வெளியே விரட்டி விட்டு அதை எடுத்துச் சொல்லி மனு தந்து அதன் மீது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை யார் அபகரித்தாலும் அவர் நீதிபதி என்றாலும் முன்னாள் முதல்வர் என்றாலும் எங்கே அந்த நிலம் இருந்தாலும் அவைகளை மீட்டு தரும் கடமை எனக்கும் இருக்கிறது. திருமாவளவனுக்கும் இருக்கிறது. நம் அனைவருக்கும் இருக்கிறது. அவற்றை மீட்போம். நம் உரிமைகளை மீட்போம்.
ஆதிதிராவிட மக்கள் நிலை குறித்து திருமாவளவன் குறிப்பிட்டார். அந்த காலம் மாற தி.மு.க. பாடுபடுகிறது. அதற்காக என்னோடு திருமாவளவன் கைகோர்த்து இருக்கிறார். அந்த நம்பிக்கை வீண் போகாது. நிச்சயம் நாம் விடுதலை பெறுவோம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
பெரியார், அண்ணா போன்றவர்களால் பாராட்டப்பட்டவர் முதல்வர் கருணாநிதி. இவருக்கு விருது வழங்குவது ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு பெருமை. அருந்ததியருக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். அந்த ஒற்றை சாதனைக்காகத்தான் ‘அம்பேத் கர் சுடர் விருதை’ முதல்வருக்கு வழங்கி உள்ளோம். பஞ்சமி நிலங்களை மீட்டு பஞ்சவர்களுக்கே கொடுக்க தனி ஆணையம் அமைக்கவும், முதல்வர் அறிக்கையில் தெரிவித்தபடி, தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். காயிதே மில்லத் பெயரில் விருது அறிவிக்க வேண்டும், புதிய சட்டசபை வளாகத்தில் பெரியார், அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.








வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...