Sporty Magazine official website | Members area : Register | Sign in

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், நத்தா நல்லூர் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அடைஞ்சி அம்மன் கோவில் கருவறை நுழைவு போராட்டம் வெற்றி.

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாசாபாத் ஒன்றியம், நத்தா நல்லூர் கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அடைஞ்சி அம்மன் கோவில் கருவறை நுழைவு போராட்டம் வெற்றி.

https://www.facebook.com/media/set/?set=a.420608108055815&type=1

வாலாசாபாத் அடுத்த நத்தா நல்லூர் கிராமத்தில் உள்ளது அரசுக்கு சொந்தமான அடைஞ்சி அம்மன் கோவில். ஆண்டாண்டு காலமாக இந்த கோவிலினுள் சேரி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த உரிமையை தட்டிக் கேட்ட நத்தா நல்லூர் விடுதலைச்சிறுத்தைகளின் முகாம் தோழர்கள் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்யப்பட்டு பிணையில் வெளி வந்துள்ளனர்.

விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டு, பின்னர் இருத்தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மாவட்ட நிர்வாகம். ஆனால் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் விடுதலைச்சிறுத்தைகள் இந்த பிரச்னையை உரிமைப் போராட்டமாக அறிவித்து இன்று 05.09.2013 காலை அடைஞ்சி அம்மன் கோவில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தியது.

விடுதலைச்சிறுத்தைகளின் இந்த ஆலய நுழைவு போராட்ட அறிவிப்பால் மாவட்ட நிர்வாகம் ஏராளமான காவல்துறையினரையும், துணை ராணுவப் படையினரையும் நத்தா நல்லூர் கிராமத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்தது.

காலை 7 மணி முதலே காவல் துறையினர் கட்சி நிர்வாகிகள் யாரையும் கிராமத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. ஆனாலும் சிறுத்தை தோழர்கள் நத்தா நல்லூர் கிராமத்தின் உள்ளே செல்ல மாற்று வழியான ஏரிக்கரையின் ஓரமாக வந்து கிராமத்தின் உள்ளே வந்தனர்.

இந்த கோவில் கருவறை போராட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல் ராஜ் தலைமை வகிப்பார் என்று மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் அறிவித்த பின்பு கிராம பொதுமக்களும், விடுதலைச்சிறுத்தைகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், DYFI தோழர்களுடன் மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலில் நுழைய சென்ற போராட்ட குழுவினரை காவல் துறையினர் இடைமறித்து போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்க, அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல, சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதியில்லை. நீங்கள் இந்த நிகழ்வை ஆலய வழிபாடு நிகழ்ச்சியாக நடத்திக்கொல்லுங்கள் ஆனாலும் 1 மணி நேரத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்று சொல்ல போராட்டக்காரர்கள் நத்தா நல்லூர் கிராமத்தின் பொதுமக்களையும், கிராமப் பெண்களும் கோவிலில் பொங்கல் வைப்பதற்கான அனைத்து பொருட்களுடன் கோவில் சென்றடைந்தனர்.

போராட்டக்காரர்கள் கோவிலில் பணியாற்றும் ஊர்த் தெருவை சேர்ந்த பூசாரி தான் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்ல காவல்துறையினரால் பூசாரி வரவழைக்கப்பட்டு சேரி மக்களால் பூஜை செய்யப்பட்டு அடைஞ்சி அம்மனுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது.

சேரி மக்கள் ஒவ்வொருவராக கோவிலினுள் சென்று அடைஞ்சி அம்மனை மிகுந்த உற்சாகத்துடன் வழிபட்டனர்.

ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்த அடைஞ்சி அம்மன் ஆலய வழிபாட்டு உரிமையை அடைந்த கிராம பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு மகிழ்ந்தனர்.

இந்த கோவில் நுழைவு போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் பாரதி அண்ணா, தோழர் சங்கர், தோழர் லாரன்சு, சி.பி.எம். தோழர் ஆறுமுகம், DYFI அரிகிருஷ்ணன், விடுதலைச்சிறுத்தைகளின் காஞ்சி மாவட்டநிர்வாகி பாசறை செல்வராசு, துணை செயலாளர்கள் இந்திரா அம்பேத்கர்வளவன், மேனகாதேவி கோமகன், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் தேவ அருள்பிரகாசம், மாநாபதி முத்தமிழன், ஊடக மையம் ஆதவன், வாலாசாபாத் ஒன்றிய அமைப்பாளர் உதயசூரியன், நகர செயலாளர் அசோக்குமார், பொருளாளர் வேதகிரி, காஞ்சிபுரம் திருமாதாசன், ஸ்டான்லி, ஆட்டோ பாஷா நகர் பாலாஜி, திருப்பெரும்புதூர் கருமா கலைவடிவன், தியாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

--------------------------------------------------------------------------------------------------
செய்தி:
ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...