Sporty Magazine official website | Members area : Register | Sign in

தி.மு.க. கூட்டணி தோல்விக்கு காரணம் ? – எழுச்சித்தமிழர் விளக்கம்!

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், காஞ்சி மாவட்ட செயலாளர் விடுதலைச்செழியன் அவர்கள் மகள் சங்கமித்திரை காது குத்தும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் எழுச்சித்தமிழர் உரையாற்றியது : இன்றைக்கு தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி ஏற்பட்டதற்கு, சில பேர் ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டதால் போட்ட ஒட்டு என்பது அடிப்படை அற்ற ஒன்று. ஈழ தமிழர்களை கொன்றவர்களை பழி வாங்க வேண்டும் என்ற அளவிற்கு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இனஉணர்வு இருந்தால் என்றைக்கோ ஈழத்தை நாம் வென்று இருக்கலாம் . முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்துகொண்டு இருந்த போது, ஐம்பதாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டு தமிழன், அந்த யுத்தம் நடந்த போது பொங்கல் கொண்டாடிக்கொண்டு இருந்தான், நான் ஒருவன் தான் சாகபோகிறேன் என உண்ணாவிரதம் இருந்தேன். தமிழ்நாட்டு தமிழர்கள் பொங்கல் கொண்டாடிக்கொண்டு, தியேட்டரில் கிடந்தான், பீச்களில் கிடந்தான், யார் ஈழம் எரிகிறது என்று வேதனைப்பட்டான். ஒரு சதவிகிதம் கூட உணர்வுள்ள தமிழர்கள் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. சில பேர் நான் பிரச்சாரம் செய்ததால் தான் தி.மு.க. கூட்டணிக்கு தோல்வி , என உளறுவது ஏமாற்று வேலை.

நடந்து முடிந்த தேர்தலில் பலபேர் பல காரணம் சொன்னாலும் முக்கிய காரணம் நான் சொன்னால் சில பேர் ஏற்று கொள்ள மறுக்கலாம் அல்லது விளையாட்டாக எடுத்து கொள்ளலாம்.நடிகர் ரஜினிகாந்த் தான், ரஜினிகாந்தை பெருமைபடுத்துவதற்காக சொல்லவில்லை , அவர் செல்வாக்கு படைத்தவர் என்பதல்ல அர்த்தம்.ரஜினிகாந்த் காலை எட்டரை மணிக்கு வாக்களிக்க வருகிறார், அத்தனை ஊடகங்களிலும் தெரியும்படி, அவர்கள் படம் பிடித்து காட்டும் வகையில் இரட்டை இலைக்கு வாக்களிப்பதை தெரியப்படுத்துகிறார்.ஒட்டு போடுவது ரகசிய வாக்கெடுப்பு முறை, யார் யாருக்கு ஒட்டு போடுகிறார்கள் என்பதை பக்கத்தில் இருப்பவர் கூட பார்க்க கூடாது. விரலில் மை வைப்பவருக்கு கூடத் தெரியக் கூடாது, பக்கத்தில் யாராவது நின்றால் கூட போ என விரட்டிவிட்டு தான் வாக்களிப்பார்கள்,ரஜினிகாந்த் என்ன விவரம் இல்லாத ஆளா?. ஒன்றும் தெரியாதவரா ?,தெரிந்தே செய்தார், அணைத்து தொலைக்காட்சிகளும் படம் பிடித்து காட்டும் வகையில் செய்தார் , சோவின் ஆலோசனையின் பேரில், அவரது வழிகாட்டுதலில் செய்தார். அனைவருக்கும் தெரியும் வகையில் இரட்டை இலைக்கு வாக்களிக்கிறார் என்றால் என்ன பொருள். என் ரசிகர்களே , நீங்கள் எல்லாம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றுதானே பொருள். இது ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த வாய்ஸ் ரஜினி வாய்ஸ். ஒரு தொகுதிக்கு விஜயகாந்துக்கே பத்தாயிரம் ரசிகர்கள் இருக்கும் போது , ரஜினிக்கு அதைவிட அதிகம் தானே இருக்கும். ஆக ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், சரத்குமார் ரசிகர்கள், எம். ஜி. ஆர். ரசிகர்கள், அம்மா ரசிகர்கள், என்று ரசிகர்கள் போட்ட ஒட்டு, அ.தி. மு. க. அணியின் வெற்றிக்கு காரணமே தவிர, 2 ஜி, கிடையாது.இது ரசிகர்கள் அனைவரும் ஒரே பக்கம் சாய்ந்ததால் வந்து முடிவு.

எண்பத்தி எட்டு வயதுடைய பாரம்பரியம் மிக்க பண்பாளர் பேராசிரியர் அன்பழகன் இந்த நாட்டிலே தோற்கிறார் , சட்டமன்றத்திற்கு குடித்துவிட்டு தான் வருவேன் என சொன்ன விஜயகாந்த் ஜெயிக்கிறார், சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் , அவர் நீ தான் எனக்கு ஊத்தி கொடுத்தாய் என கை காட்டிய அம்மா ஆளும் கட்சி தலைவர்.சினிமாவில் அட்டை கத்தி வைத்து போராடுகிற நடிகர் பட்டாளத்தை உண்மை போராளி என நினைத்து ரசிகர் பட்டாளம் வாக்களித்து விட்டது. உண்மையில் கண்ணுக்கு பார்த்தால் ஒரு கோடியே நாற்பத்தைந்து லட்சம் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு, ஒரு கோடியே எண்பத்தி மூன்று லட்சம் வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு , பள்ளிக்கு போகிறவன் கல்லூரிக்கு போகிறவன், வேலை வெட்டி இல்லாமல் தியேட்டரில் உட்கார்து பொழுதை கழிக்கிறவன், குத்தாட்டம் பார்த்து குஷி ஆகிறவன், இப்படி பட்ட கூட்டம் போட்ட ஒட்டு தான் இரண்டு கூட்டணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் நடந்து இருப்பது தமிழகம் மீண்டும் சினிமா மோகத்தில் போய் சிக்குண்டுள்ளது, சினிமா அலை தான் தி. மு. க. கூட்டணியை தோற்கடித்துள்ளது.

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இளஞ்சேகுவாரா, எழில் கரோலின், ஆ.அம்பேத்கர்வளவன் ,தென்னவன், முருகம்மாள் ஆரோன், பகலவன், குமரப்பா ,தி.மு.க. நிர்வாகிகள் பாலவாக்கம் விஸ்வநாதன், எட்டியப்பன் , ரவிச்சந்திரன் பா.ம.க. மோகனசுந்தரம் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...