எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் காய்களை நகர்த்துகிறவர்கள் திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி வேலைகளில் இறங்கியுள்ளனர். சென்னை, அசோக் நகர் பகுதியில் நிறுவப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் அரை உருவச்சிலையை அவமதித்ததாக விடுதலைச்சிறுத்தைகள் மீது பழிபோட்டு சாலைமறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழகம் தழுவிய அளவில் வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்து வருகின்றனர். கொள்கைரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தலைவர்களை அவமதிப்பது போன்ற கீழ்த்தரமான சதிச் செயல்களை விடுதலைச்சிறுத்தைகள் ஒருபோதும் செய்ததில்லை. திட்டமிட்டே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டவும் திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்தகைய இழிவான செயல்களில் ஒரு சிலர் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. எத்தகைய கருத்து மோதல்கள் இருந்தாலும் தனி மனித உறவுகளில் நாகரிகமான அணுகுமுறைகளையே கையாண்டு வருகிறோம். ராஜீவ் சிலை அவமதிப்புக்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் துளியளவும் தொடர்பில்லை என்பதை உண்மையான காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
ராஜீவ் சிலையை அவமதித்ததில் தமிழக முதல்வரையும் தொடர்புபடுத்தி அவருடைய தூண்டுதலில்தான் இது நிகழ்ந்திருக்கிறது என்று அவதூறு பரப்புவதிலிருந்து அத்தகைய நபர்களின் அரசியல் உள்நோக்கத்தையும் சதித் திட்டத்தையும் அப்பாவி காங்கிரசுத் தொண்டர்களும் தமிழகப் பொதுமக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இத்துடன், இராஜபக்சே அழைப்பு தொடர்பாக நான் அளித்த பேட்டியின் மூலம் தனிப்பட்டமுறையில் உண்மையான காங்கிரசுத் தொண்டர்களின் மனம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக கூட்டணியை விரும்பாதவர்கள் விடுதலைச்சிறுத்தைகளை ஒரு சாக்காக வைத்து பரப்புகிற அவதூறுகளுக்கும் வன்முறை செயல்களுக்கும் எதிர்வினை ஆற்றவேண்டும் என்கிற அடிப்படையில் என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகள் போராட்ட நடவடிக்கைகளில் ஏதும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்றி தனிப்பட்ட முறையில் விடுதலைச்சிறுத்தைகள் யாரும் உணர்ச்சிவயப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படவேண்டாம் எனவும் சகிப்புத்தன்மை யோடும் பொறுமையோடும் அமைதிகாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.