12.07.2010 இலங்கைத்தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!*தமிழக மீனவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்
*இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல்
தொல்.திருமாவளவன் அறிக்கை!
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரை சிங்கள இனவெறி கடற்படையினர் அடித்துப்படுகொலை செய்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய இனவெறிப் படுகொலைகளை சர்வதேசக் கடல் எல்லைப் பகுதிகளை தாண்டி நடத்தி வருகின்றனர்.
அதன் படி இந்திய கடல் எல்லைப்பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகில் ஏறி கண்மூடித்தனமான கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் பலர் காயமுற்றனர், செல்லப்பன் என்பவர் படுகொலையாகியிருக்கிறார். இந்திய அரசு சிங்கள கடற்படையின் இத்தகைய அத்துமீறல்களையும், இனவெறிப் படுகொலைகளையும் கண்டிப்பதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ எத்தகைய முனைப்பையும் மேற்கொள்ளவில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளார்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் போக்கானது ஈழத்தமிழர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிறது. இந்திய அரசின் இந்த போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
சர்வதேசச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மூவர் குழுவை நியமித்து ஐ.நா.பேரவை ஆணையிட்டுள்ளது.
ஆனால், சர்வதேச சமூகத்தையும், ஐ.நா.பேரவையையும் அவமதிக்கும் வகையில் சிங்கள இனவெறி அரசு அந்தக்குழுவுக்கு விசா வழங்க மறுத்ததுடன், கொழும்பிலுள்ள ஐ.நா.தூதரகத்தையும் இழுத்து மூடியுள்ளது.
இவ்வாறு, ஐ.நா.பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகத்தையே இழிவுபடுத்தியுள்ள சிங்கள இனவெறி அரசை எச்சரிக்கும் வகையில் தி.மு.க வின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மூவர் குழுவை நியமனம் செய்த ஐ.நா.பேரவையின் தூதரகத்தை இழுத்துப்பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 12-07-2010 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகத்திலிருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறபடுத்த வலியுறுத்தி இலங்கைத்தூதரகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச்சிறுத்தைகளும், தமிழின உணர்வாளர்களும் திரண்டெழுந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்.