Sporty Magazine official website | Members area : Register | Sign in

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலைய முற்றுகை போராட்டம் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
 
புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் டி.எஸ்.பி.யை முற்றுகையிட்டனர். பின்னர் மாமல்லபுரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க இளைஞர் மாநாடு கடந்த 28ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த வன்னியர் சங்கத்தினருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த தலித் அமைப்பினருக்கும் இடையே ஆங்காங்கே சிறு மோதல்கள் ஏற்பட்டன. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் 13 புகார்கள் கொடுக்கப்பட்டன. இருதரப்பினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில், புகார்களின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன், துணைச் செயலாளர் கிட்டு, தலைமையில் 100க்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர், மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர். அங்கு வந்த டி.எஸ்.பி. சம்பந்தமூர்த்தியிடம் முறையிட்டனர் . இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி, திட்டியதாக தெரிகிறது.

இதைக் கண்டித்து, டி.எஸ்.பி.யை முற்றுகையிட்ட தலித் அமைப்பினர், காவல் நிலையம் எதிரே அமர்ந்து கண்டன கோஷமிட்டனர். மாமல்லபுரம் & கோவளம் சாலையில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

‘டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தலித் அமைப்பினரின் கொடி கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீதும், பைக்குக்கு தீ வைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கோஷமிட்டனர்.

தகவலறிந்த செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜாதேவி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் கண்ணதாசன் ஆகியோர் வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால், மாமல்லபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...