விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - மாநிலச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 31.01.2010 இடம் : வர்த்தகர் சங்கம், சைதாப்பேட்டை, சென்னை.
தலைமை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
நாள் : 31.01.2010 இடம் : வர்த்தகர் சங்கம், சைதாப்பேட்டை, சென்னை.
தலைமை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
தீர்மானங்கள்
மாவீரர் வேலுப்பிள்ளை மற்றும் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு வீரவணக்கம்!
1. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தந்தை திரு. வேலுப்பிள்ளை அவர்கள், கட்சியின் காஞ்சி மாவட்டச் செய்தித் தொடர்பாளர் நெமிலி சி. கோமகன், லத்தூர் ஒன்றியச் செயலாளர் அம்பேத்கர் மணி, திண்டுக்கல் மாவட்டத் துணைச் செயலாளர் ஃபிலிப், நெல்லை மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் செயராமன் மற்றும் மதுரை மாநகர மாவட்டத் துணைச் செயலாளர் நம்பிராசன் ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்!
2. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறவழியிலும் ஆயுத வழியிலும் நடைபெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்தை, 2009, மே 17ஆம் தேதியுடன் முடித்து விட்டதாகச் சிங்கள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பது பொருளற்றதாகும். ஆகவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை, இந்தியா மற்றும் உலக நாடுகள் உடனடியாக நீக்க வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
வதைமுகாம்களில் அடைபட்டுள்ள ஈழத் தமிழரை விடுதலை செய்ய நடவடிக்கை!
3. ஈழத்தில் சிங்கள இராணுவ வதைமுகாம்களில் அடைபட்டுள்ள இரண்டரை லட்சத்திற்கும் மேலான தமிழர்களையும், புலிகள் என்ற பெயரால் கமுக்க முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் பன்னிரெண்டாயிரத்திற்கும் மேலான தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் மாந்தநேய அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
ஈழத் தமிழர் சிக்கலுக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு!
4. .ஈழத் தமிழர் சிக்கலுக்கு தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வாகும் என்று இச்செயற்குழு பிரகடனப்படுத்துகிறது. ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு ஓர் இடைக்காலத் தீர்வாய் தன்னாட்சி உரிமையை மீட்டுத்தர இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
வீட்டுமனைப் பட்டா வரம்பைத் தளர்த்திய தமிழக முதல்வருக்குப் பாராட்டு!
5. ஐந்தாண்டுகள் என்று இருந்த காலவரம்பைத் தளர்த்தி, அரசுப் புறம்போக்கு நிலத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் இச்செயற்குழு நெஞ்சாரப் பாராட்டி வரவேற்கிறது.
தலித்துகளுக்கான நில எடுப்பு விவகாரங்களில் வழக்குத் தொடுக்க முடியாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
6. தமிழகத்தில் தலித்துகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் தலித்துகள் குடியேறாத வகையில் வழக்குகள் தொடுக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கில் இன்னும் நீதிமன்றங்களிலே நிலுவையில் உள்ளன. இருபது ஆண்டுகள், இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள தலித் மக்களுக்கு எதிரான இத்தகைய வழக்குகளை விரைந்து முடித்து, அவ்விடங்களில் தலித்துகள் குடியேற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், இனி வருங்காலத்தில் தலித்துகளுக்கான நில எடுப்பு விவகாரங்களில் வழக்குத் தொடுக்க முடியாத வகையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தலித் மக்களுக்கான சுடுகாட்டு மற்றும் சுடுகாட்டுப் பாதைப் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வைக் காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
7. தமிழகமெங்கிலும் பெரும்பாலான கிராமங்களில் தலித் மக்களுக்கு சுடுகாடு அல்லது சுடுகாட்டுப் பாதை இல்லாத நிலைமைகள் உள்ளன. இதனால் அவ்வப்போது சாதிய வன்முறைகளும் நடக்கின்றன. மண்ணின் மைந்தர்களான தலித் மக்களுக்கு இறப்புக்குப் பின்னரும் சுடுகாடு அல்லது சுடுகாட்டுப் பாதை இல்லை என்கிற கொடுமை நீடிப்பது வேதனைக்குரியதாகும். எனவே தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி தலித் மக்களுக்கான சுடுகாட்டு மற்றும் சுடுகாட்டுப் பாதைப் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வைக் காணும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இக்குழு கேட்டுக்கொள்கிறது.
வேலூர் கோட்டை மசூதியில் வழிபாடு செய்வதற்கு இசுலாமியருக்கு அனுமதி வழங்க வேண்டும்!
8. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியை மட்டும் இந்திய அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த ஓரவஞ்சனைப் போக்கை எதிர்த்து, இசுலாமியச் சிறுபான்மை மக்கள் தங்களுக்கான வழிபாட்டு உரிமையைக் கோரி அம்மசூதியைத் திறந்துவிட வலியுறுத்தி நீண்டகாலமாகக் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த 20š01š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பிலும் மசூதி நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் சுமார் 5,000க்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய அரசு இந்து மற்றும் கிறித்தவ வழிபாட்டுத் தலங்களை வழிபடுவதற்கு அனுமதித்திருப்பதைப் போல மசூதியிலும் வழிபாடு செய்வதற்கு இசுலாமியருக்கு அனுமதி வழங்க வேண்டுமென இச்செயற்குழு இந்திய அரசை வற்புறுத்துகிறது.
பட்டதாரித் தமிழாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட முதல்வர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும்!
9. எதிர்வரும் சூன் திங்களில் தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ள சூழலில், செம்மொழியாம் தமிழ்மொழியைப் படித்துப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பயிற்சி பெற்றுள்ள சுமார் இருபதாயிரத்துக்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடுவது வேதனைக்குரியதாகும். எனவே, செம்மொழி தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் பட்டதாரித் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிட ஆவன செய்யவேண்டுமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
நரிக்குறவர், குறவர், குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும்!
10. தமிழகத்தில் வாழும் நரிக்குறவர், குறவர் மற்றும் குருமன்ஸ் சமூகத்தைச் சார்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டுமென மாநில அரசு 14š08š2006இல் பரிந்துரை செய்தும் இதுவரை இந்திய அரசு அப்பட்டியலில் இணைத்திடவில்லை. இந்நிலையில் மேலும் காலந்தாழ்த்தாமல் மேற்கண்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட வேண்டுமென இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
11. தமிழகத்திலுள்ள தலித், இசுலாமியர் மற்றும் குறவர் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் மீது பொய் வழக்குகளைப் புனைவதும், குண்டர் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில் சிறைப்படுத்துவதும் தமிழகக் காவல்துறையின் வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளின் மீது அண்மைக்காலமாக அத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்ந்து ஏவப்பட்டு வருகின்றன. காவல்துறையின் இத்தகைய போக்கை விடுதலைச் சிறுத்தைகளின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தலித், இசுலாமியர் மற்றும் குறவர் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
சூணாம்பேடு சேரியில் ஒற்றுமையை உருவாக்கும் வகையில் காவல்துறையின் போக்குகளை தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
12. காஞ்சிபுரம் மாவட்டம், சூணாம்பேடு கிராமத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த இரு பிரிவினருக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் பகைமையால் அடுத்தடுத்துப் படுகொலைகள் நிகழ்ந்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்தச் சூழலில், அண்மையில் அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரை காவல்துறை பிடித்து வைத்திருந்து \\\"எண்கெளண்டர்\\\' என்னும் பெயரில் சுட்டுப் படுகொலை செய்துள்ளது. காவல்துறையின் இந்தப் போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும் இருதரப்பையும் கைது செய்கிறோம் என்று இருதரப்பினர் மீதும் எண்ணற்ற பொய் வழக்குகளைப் புனைந்து கைது நடவடிக்கை என்னும் பெயரில் சூணாம்பேடு சேரிக்குள் நுழைந்து பெண்களையும், முதியவர்களையும் தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் காவல்துறை பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அங்கு நிகழ்ந்து வரும் அனைத்துச் சிக்கல்களுக்கும் மோதல்களுக்கும் பாதிப்புகளுக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளே அடிப்படைக் காரணம் என்பதை இச்செயற்குழு வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது. எனவே தமிழக அரசு சூணாம்பேடு சேரியில் ஒற்றுமையை உருவாக்கும் வகையிலும் அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறையின் போக்குகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அச்சேரி இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.