விடுதலை சிறுத்தைகள் மறியல்!
கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையின் கை மற்றும் மூக்கை சிலர் உடைத்துள்ளனர். இதுபோல் ஊராட்சிமன்ற அலுவலக ஜன்னல் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டிருந்தன.
இதையறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மாலை அங்கு திரண்டனர். பின்னர் நெரும்பூர் & புதுப்பட்டினம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலையை உடைத்த சமூக விரோதிகளை உடனே கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். தகலறிந்த மாமல்லபுரம் டிஎஸ்பி சம்பந்த மூர்த்தி, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். விடுதலை சிறுத்தை மாவட்ட துணை செயலாளர் சிறுத்தை கிட்டு, மாவட்ட பொருளாளர் இளையவளவன், மாவட்ட நிர்வாகிகள் தமிழ் வளவன், வேலு பிரபாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தலித் மாறன், தயாளன் ஆகியோருடன் சமாதான பேச்சு நடத்தினர். சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும், ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் புதிதாக அம்பேத்கர் சிலை அமைத்து தருவதாக விட்டிலாபுரம் ஊராட்சி தலைவர் சகாதேவனும் உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு, அசம்பாவித சம்பவம் நடக்காமலிருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.