Sporty Magazine official website | Members area : Register | Sign in

தாய்சொல்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முதல் பதிவு. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை முதன்மையாகவும் பெரும்பான்மையாகவும் அணிதிரட்டி, அமைப்பாக்கி, இயங்கிவரும் ஓர் அரசியல் கட்சி, வலுவானதொரு கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது இதுதான் முதல் நிகழ்வு. தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த கடந்த பத்தாண்டுகளில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அடுக்கடுக்கான போராட்டங்களையும், எழுச்சிமிகுந்த பேரணிகளையும், எண்ணற்ற கருத்தரங்குகளையும் - மாநாடுகளையும் நடத்தி, வெகுமக்களின் நன்மதிப்பைப்பெற்று வளர்ந்தும் வலுவடைந்தும் வருகிறது. அதற்குச் சான்றாகவே, தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில், விடுதலைச்சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிற நிகழ்வு விளங்குகிறது.
கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில்தான் முதன்முறையாக விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் பங்கேற்றது. அப்போது அரசியல் கட்சியாகப் பதிவு பெறாத ஒரு சமூக விடுதலை இயக்கமாகவே இயங்கி வந்தது. தமிழ் மாநிலக் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் பங்கேற்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதென்றாலும், அன்றைய நிலையில் அது மூன்றாவது கூட்டணியே ஆகும்.
அதாவது, புதிதாக உருவாகியிருந்த தமிழ் மாநிலக் காங்கிரசும் விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்தியக் குடியரசு கட்சி முதலான தலித் கட்சிகளும் இணைந்து உருவாக்கியிருந்த கூட்டணியே அது! திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு மாற்றாக உருவான புதிய கூட்டணி! அக்கூட்டணியில் பங்கேற்றதும் சிதம்பரம் தொகுதியிலும் பெரம்பலூர் தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றதும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒரு மகத்தான அரசியல் அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2001இல் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்றது. தமிழகத்தில் எட்டுத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு மங்களூரில் மட்டும் வெற்றி பெற்றது. பின்னர் 2006இல் அதிமுக கூட்டணியில் பங்கேற்று தமிழகத்தில் 9 இடங்களிலும் புதுச்சேரியில் இரண்டு இடங்களிலும் போட்டியிட்டு காட்டுமன்னார்குடியிலும் மங்களூரிலும் வெற்றிபெற்றது.
இத்தகைய வரலாற்றுப் பதிவுகளுடன் பயணத்தைத் தொடர்ந்த விடுதலைச்சிறுத்தைகள், 2009இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஒரு வரலாற்றுப் பதிவாகும். ஒவ்வொரு தலித்தும் இதனைப் பெருமையோடு சிலாகிப்பதைக் காணமுடிகிறது. அரசியல்ரீதியாக, காலமெல்லாம் வஞ்சிக்கப்பட்டு, சுரண்டப்பட்டுவரும் ஓர் உழைக்கும் வர்க்கம், விடுதலைச்சிறுத்தைகளின் மூலமாக தலைநிமிர்வதைக் காணமுடிகிறது.
அதே வேளையில், விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாட்டை எதிர்மறையாக விமர்சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதாவது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுள்ள காங்கிரசுக் கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெறுவது வரவேற்கத்தக்கதல்ல என்கிற விமர்சனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்ததையடுத்து, விடுதலைச்சிறுத்தைகளே அவ்விமர்சனத்தைச் சரியென கருதும் நிலை உருவானது. மாவட்டச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் அது எதிரொலித்தது.
‘காங்கிரசு இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெறக்கூடாது’ என்கிற கருத்துப் பரவலாகப் பேசப்பட்டது. எனினும், இறுதியில் திமுக கூட்டணியில் தொடர்கிறோமோ இல்லையோ, ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற முடியாது என்கிற தெளிவோடு அக்கூட்டம் கலைந்தது.
கடந்த 2006இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றப் பொதுத்தேர்தலின்போது, திமுக அணியில் விடுதலைச்சிறுத்தைகள் இணைந்தது. தொடர்ந்து திமுக அணியோடு தேவையான சூழல்களில் இணைந்து செயலாற்றி வந்தது. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் சிங்கள அரசின் இனவெறிப் போரை நிறுத்த, இந்திய அரசு தலையிட வலியுறுத்தி, திமுக முன்னெடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் ஒத்துழைத்தது. எனினும், விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில், திமுக உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் தீவிரமாகச் செயல்பட முன்வராத நிலையில், கடந்த சனவரி 15ஆம் நாள், சாகும்வரை உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட நேர்ந்தது. செங்கல்பட்டு அருகே, மறைமலை நகரில் தொடங்கிய அந்த அறப்போர் தமிழகத்தில் நிலவிய அந்த இடைக்கால அமைதிச் சூழலை உடைத்தது. கனன்று கொண்டிருந்த இனமான எழுச்சி தீயாய்ப் பற்றிப் பரவியது. நான்கு நாள்களுக்குத் தொடர்ந்த அப்போராட்டத்தால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதென விடுதலைச்சிறுத்தைகள் பரவலாகக் கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 360 பேருக்கும் மேலாகக் கைது செய்யப்பட்டு , சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 26 பேர் குண்டர் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தளைப்படுத்தப்பட்டனர். அத்துடன், கண்டதும் சுட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள், நான்காவது நாளன்று, இரண்டாவது முறையாக மேடைக்கு வந்து, ‘போராட்டத்தைக் கைவிடவேண்டும்’ என்றும், ஒருமித்த கருத்துள்ளவர்கள் ‘அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவோம்’ என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தமிழகத்தையே நிலைகுலைய வைக்கும் வகையில், ‘தொடர் முழு அடைப்பு’ போராட்டத்தை நடத்துவோமென உறுதியளித்தார். இந்நிலையில், தோழமைக் கட்சியின் தலைவர் விடுத்த வேண்டுகோளையும் உறுதிமொழியையும் மதிக்கிற வகையில் நான்காவது நாளன்று இரவு உண்ணாநிலை அறப்போரை நிறைவு செய்யும் நிலை ஏற்பட்டது. அன்றைய நிலையில், அந்த அறப்போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத்தான் ‘தமிழகத்துக் கரும்புலி’ தம்பி முத்துக்குமார் தீக்குளித்து வீரச்சாவடைந்தான். அவனைத் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்து பதின்மூன்று பேரும் அயல்நாடுகளில் மூன்றுபேரும் ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் நீத்தனர். இவர்களில் மூன்று பேர் விடுதலைச்சிறுத்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் தமிழ்வேந்தன், அன்னவல்லி ஆனந்தராஜ், சென்னை எழில்வளவன் ஆகியோர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தீவிர களப்பணியாளர்கள் ஆவர். அத்துடன், ஆலப்பாக்கம் நீதிவளவன் என்பவர் அலைபேசிக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்து ‘தற்கொலை’ செய்ய முயன்று எலும்பு முறிவுடன் உயிர் பிழைத்துக் கொண்டார்.
இவ்வாறு, மறைமலை நகரில் மேற்கொண்ட உண்ணாநிலை அறப்போர் மகத்தான தாக்கத்தையும் பாதிப்பையும் எழுச்சியையும் உருவாக்கியது என்பதை நேர்மையான அரசியல் ஆய்வாளர்கள் மறுக்க வாய்ப்பில்லை. இத்தகைய புரட்சிகரமான எழுச்சியை உருவாக்கிய அந்த உண்ணாநிலை அறப்போரின் நிறைவில்தான், ‘ஈழத்தமிழருக்கு எதிராகவும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிற காங்கிரசை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிவோம்’ என அடிவயிற்றின் அனல்வீச்சாய், ஆவேசத்தின் கனல் வீச்சாய் முழங்கினோம்! எமது இந்தப் போர் முழக்கம்தான் தமிழ்த்தேசியச் சக்திகளையும் இதரப் புரட்சிகரச் சக்திகளையும் காங்கிரசுக்கு எதிராக குவிமையப்படுத்திட ஏதுவாக இருந்தது எனலாம். விடுதலைச்சிறுத்தைகளும் அந்தத் திசை வழியில்தான் வெகுண்டெழுந்தனர். இந்நிலையில் உருவானதே ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமாகும்’. அதன் உருவாக்கத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்களிப்பும் மகத்தானதேயாகும். நாடு தழுவிய அளவில் அவ்வியக்கத்தை முழுவீச்சோடு முன்னெடுத்துச் சென்றதில், விடுதலைச்சிறுத்தைகளுக்கு மிகப்பெரும் பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவ்வாறான சூழலில், நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. கூட்டணிக்கான நகர்வுகள் தொடங்கின. விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் எச்சரிக்கையாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களிடையே ஒரு வேண்டுகோளை முன்மொழிந்தது. அதாவது, ஈழத்தமிழரின் பாதுகாப்பை முழுமனதுடன் முன்னிறுத்தும் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்திலும் ஒரே அணியாகச் செயல்படவேண்டும் என்கிற கருத்தை திரும்பத் திரும்ப அழுத்தமாக வலியுறுத்தியது. அதாவது, பா.ம.க. தலைமையில் மதிமுக, சிபிஐ மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவற்றுடன் இன்னும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குதல் வேண்டுமென்பதை அழுத்திக் கூறினோம்.
ஆனால், அக்கருத்து ஏற்கப்படவில்லை. மதிமுகவும் சிபிஐயும் ஏற்கனவே அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள். அவை அவ்வணியிலிருந்து வெளியேற விரும்பவில்லை. அதற்குப் பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம். விடுதலைச்சிறுத்தைகளைப் பொறுத்தவரையில் திமுக அணியில்தான் இருக்கிறது. உள்ளாட்சிமன்றத் தேர்தலிலிருந்தே அந்த அணியில்தான் தொடர்கிறது. எனினும், திமுகவுக்கு எதிரான அணியிலுள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றிடத் துணிந்து களமிறங்கினோம். ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை மட்டுமே முன்வைத்து அந்த முடிவையெடுத்தோம். அப்பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள பா.ம.க. மட்டும் எந்த அணியிலும் இல்லாத நிலையிலிருந்தது. ஆனால், அதிமுக அணியோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கும் மனநிலையிலிருந்தது. இந்நிலையில்தான், திமுக அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம்; புதியதொரு அணியை - மாற்று அணியை, ஈழத்தமிழர் பாதுகாப்பு அணியை உருவாக்குவோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்தியது. ஆனால், பா.ம.க., மதிமுக, சிபிஐ மற்றும் திரு.பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழர் பேரமைப்பு ஆகியவை, அதிமுக அணியை வலுப்படுத்தவேண்டுமென்றும் விரும்பின. காங்கிரசை ஒழிக்க, திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இணைவதே சரியென வாதிட்டன. திமுக - காங்கிரசு கூட்டணி சரியில்லையென்கிறபோது, அதற்கு மாற்று அதிமுக கூட்டணிதான் என்பதை அரசியல்ரீதியாக விடுதலைச்சிறுத்தைகளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஆகவேதான், தனித்துப் போட்டியிடலாம் என்கிற மனநிலையில் விடுதலைச்சிறுத்தைகள் தயாரானோம். இந்நிலையில்தான், கடந்த மார்ச்சு-16 அன்று திமுக தலைவர் கலைஞர் அவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பில் “விடுதலைச்சிறுத்தைகள் திமுக கூட்டணியில் தொடர்கிறது” என்றும், “திமுக - விடுதலைச்சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் கூட்டணி உறவு கொண்டுள்ளது” என்றும் அறிவிப்புச் செய்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக கூட்டணியிலேயே விடுதலைச்சிறுத்தைகள் தொடர்கிறது என்பதை யாமும் உறுதிசெய்தோம். அதாவது, புதிதாக திமுக கூட்டணியில் இணையவில்லை. ஏற்கனவே இணைந்திருந்த நிலையில், அதே அணியில் தொடர்கிறோம் என்பதையே உறுதி செய்தோம்.
திமுகவை விட, அதிமுக எந்த வகையில் ஈழத்தமிழருக்கு ஆதரவானது என்பதை உறுதிசெய்ய முடியும்? ‘போரை நிறுத்து’ என்று ஒப்புக்குக்கூட வாய்திறக்காத ஒரே கட்சியாக அதிமுக மட்டுமே இருந்தது. காங்கிரசு இனி, திமுகவை விட்டு வெளியேறாது என்பது உறுதிப்பட்ட பிறகே, ஒருநாள் கூத்தாக செல்வி ஜெயலலிதா அவர்கள் உண்ணாநிலை அறப்போர் நடத்தினார். மற்றபடி, ஈழம் விடுதலை பெறவேடுமென்பதிலோ விடுதலைப்புலிகளால்தான் அது முடியும் என்பதிலோ உடன்பாடு இல்லாத கட்சி அதிமுக! சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் குரலை எதிரொலிக்கும் வகையில் ‘புலிகள் சரணடையவேண்டுமென்றும்’ ‘போரில் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்றும் இனம் அழிந்துகொண்டிருக்கும் இந்தக் கொடூரமான சூழலிலும் ஈவிரக்கமற்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டவர்தான் செல்வி ஜெயலலிதா!
ஈழத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் கொள்கையளவில் நேரெதிரான அதிமுகவை எப்படி ‘மாற்று சக்தியாக’ ஏற்க முடியும்? அதிமுக வெற்றிபெற்றால் செல்வி ஜெயலலிதா தேர்தலுக்குப் பின்னர் காங்கிரசுப் பக்கம் போகமாட்டார் என்பதற்கு என்ன உறுதி உள்ளது?
காங்கிரசுக்குத் துணைபோகும் திமுக வேண்டாமெனில், இராஜபக்சேவுக்குத் துணைபோகும் அதிமுக எப்படி சரியாகும்?
திமுக - அதிமுக அல்லாத மாற்று அணிதானே கொள்கை அளவிலும் செயலளவிலும் மிகப் பொருத்தமாகவும் சரியாகவும் இருக்க முடியும். இக்கருத்தை மீண்டும் மீண்டும் விடுதலைச்சிறுத்தைகள் முன்மொழிந்ததே! அதனை மறுதலித்துவிட்டு கொள்கையளவில் ஈழத்திற்கே எதிரான அதிமுகவுடன் சேரவேண்டுமென்பது எந்தவகையில் ஞாயமானது என்றுதான் விளங்கவில்லை. விடுதலைச்சிறுத்தைகளின் முயற்சி வெற்றிபெறாத நிலையில்தான், எம்மை வரவேற்ற திமுகவுடன் கூட்டணி உறவைத் தொடர்கிறோம். விடுதலைச்சிறுத்தைகள் திமுக அணியில் இடம்பெறக்கூடாது என்கிற விமர்சனத்தை முன்வைப்பவர்கள் என்மீது நன்மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள்தாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அத்தகைய சனநாயகச் சக்திகள், பாமகவும், மதிமுகவும், சிபிஐயும் அதிமுக அணிக்குப் போகக்கூடாது என்றோ, விடுதலைச்சிறுத்தைகள் முன்மொழிந்த ‘புதிய அணி - மாற்று அணியை’ உருவாக்க வேண்டுமென்றோ வலியுறுத்தாததுதான் ஏனென்று விளங்கவில்லை.
அவ்வாறு ஒரு புதிய அணி உருவாகி, அந்த அணியிலே இணையாமல் விடுதலைச்சிறுத்தைகள் திமுக அணியிலே இருந்திருந்தால் இந்த விமர்சனம் மிகச்சரியானதே ஆகும்.
கொள்கையளவிலே தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் திமுக, அதற்கான பல போராட்டங்களையும், இழப்புக்களையும் சந்தித்துள்ளது. தற்போதைய இனவெறிப்போரை நிறுத்த வேண்டுமென்றும் தம்மால் இயன்ற முன் முயற்சிகளை எடுத்தது. ஆனால், நடைமுறைச் சிக்கலால், நாம் விரும்புவதற்கு மாறான ‘தேர்தல் நிலைப்பாடு’ மேற்கொண்டுள்ளது. இது தவிர்க்கமுடியாததேயாகும். ஈழம் விடுதலை பெறவேண்டுமென்பதில் உடன்பாடு இல்லாத அதிமுகவுடன் அதே கருத்துக்கொண்ட சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளும் கூட்டணி உறவைக் கொண்டுள்ளன. பாமகவும் மதிமுகவும் ஈழம் விடுதலை பெறுவதே ஒரே தீர்வு என்பதில் உறுதியுள்ள கட்சிகளாகும். ஆனால், மற்ற கட்சிகள் நேரெதிரான கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள கட்சிகள்தாம். அத்தகைய அதிமுக அணிதான், ஈழத்தமிழரைப் பாதுகாப்பதற்கான ஒரே அணி என்பதைப் போன்ற மாயையை உருவாக்குவதும் ஒரு வகையில் ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் துரோகமேயாகும். ஒத்தக் கருத்துள்ள - கொள்கை நிலைப்பாடுள்ள திமுகவுடன் விடுதலைச்சிறுத்தைகள் கூட்டணி உறவு வைத்துள்ளது என்பதே உண்மை நிலையாகும். ஓப்பீட்டளவில், அதிமுக கொள்கையளவிலும் நடைமுறை நிலையிலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கட்சி!
திமுக கொள்கையளவிலும் நடைமுறையளவிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கட்சி! இதனை கடந்தகால வரலாற்றுச் சுவடுகள் உறுதிப்படுத்தும். தற்போதைய நிலையில், சிங்கள அரசின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக ஈழம் கூடவே கூடாது என்கிற இரண்டு இடதுசாரிக் கட்சிகள் அதிமுக அணியில் இருப்பதைப்போல திமுக அணியில் காங்கிரசு உள்ளது. இதில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால், அதிமுகவைவிட திமுக, ஈழவிடுதலையில் தீவிர ஈடுபாடுள்ள கட்சி என்பதனால், திமுகவுடன் கூட்டணி உறவு வைத்துக்கொள்வது எந்த வகையிலும் ஈழத்தமிழருக்குத் துரோகம் செய்வதாகாது என விடுதலைச்சிறுத்தைகள் நம்புகிறோம். தனி அணியாக - மாற்று அணியாக ஈழத்தமிழர் பாதுகாப்பு அணியாக ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உருவாகியிருக்கவேண்டுமென்பது ஏன் நிறைவேறவில்லை. அதற்கு விடுதலைச்சிறுத்தைகள்தான் காரணமா? அம்முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை? அதற்குரிய விடைகளைத் தேடுவதுதான் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் கடமையாக இருக்க முடியும் என்பதை இந்தச் சூழலில் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டவிரும்புகிறது. எந்த அணியில் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் அதாவது வென்றாலும், வெற்றிவாய்ப்பை இழந்தாலும், விடுதலைச்சிறுத்தைகள் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, ஈழவிடுதலை போன்ற கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து துளியளவும் பின்வாங்கமாட்டோம் என்பதை நேர்மையுள்ள அரசியல் ஆய்வாளர்கள் - பார்வையாளர்கள் அறிவார்கள் என்று நம்புகிறோம்! அனைத்து விமர்சனங்களையும் நல்லெண்ணத்தோடு வரவேற்கவும் எம்மை அதிலிருந்து செழுமைப்படுத்திக்கொள்ளவும் விடுதலைச்சிறுத்தைகள் அணியமாகவே இருக்கிறோம்.
- தொல்.திருமாவளவன்
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...